ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு
மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திற்கான கன்னி நீர் விநியோக தேசிய சம்பிரதாய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 08ஆம் திகதி காலை 11 மணிக்கு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் இடம்பெறவுள்ளது.
மொரகஹகந்தை நீர் விநியோகத்திட்டம் வடக்கு, வடமத்தி, வடமேல் மாகாணங்களின் விவசாய மேம்பாட்டிற்கு நேரடியாக பங்களிப்பு செய்வதுடன், 25 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய மின்வலைப்பின்னலில் ஒன்றிணைக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளதென ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் மஹாவலி அபிவிருத்தி திட்டத்திற்கூடாக நீரை பெற்றுவந்த ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பு இன்னும் 82000 ஹெக்டேயரினால் விருத்தியடைவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திற்குள் நீரை உள்வாங்கும் தேசிய வைபவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஊடக அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
ஐம்பெரும் நீர்த்திட்டத்தின் இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோக வைபவம் மற்றும் மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை இத்தோடு முடிவுக்கு கொண்டுவருவதை நோக்காக கொண்டு இதனை தேசிய வைபவமொன்றாக நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் வைபவத்தை முன்னிட்டு விளையாட்டு அமைச்சு சைக்கிளோட்டப் போட்டியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விரண்டு போட்டிகளும் எதிர்வரும் 08ஆம் திகதி முற்பகல் வேளையில் மொரகஹகந்த நீர்த்தேக்கம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கோன்கஹவில, நாவுல, தம்புள்ளை, மடவல உல்பத, மாத்தளை, பலகடுவ, அக்குரணை, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை 108 கி.மீற்றர் தூரத்திற்கு இடம்பெறும்.
நீர்வழங்கும் வைபவத்தை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் அன்றைய தினம் (8) பொல்கொல்லையில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் வைபவத்திலும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 1960 காலப்பகுதிகளில் மஹாவலி அபிவிருத்தி திட்டம் குறித்த சிந்தனை முன்வைக்கப்பட்டதுடன், அதன் பின் 1976ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் நீர்விநியோக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வினை நினைவுபடுத்தும் முகமாகவும் இவ்வைபவம் இடமபெறவுள்ளது.
மொரகஹகந்தை நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோக நிகழ்வு ஜனவரி 08ஆம் திகதி நடைபெறுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருப்பதால் இவ்விரண்டு வைபவங்களும் ஒரே தினத்தில் ஒன்றாக நடாத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment