ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள்

*மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் பணிப்பு 2008−2015 வரையிலான ஆவணங்களை பாதுகாக்க குழு
* பிரதமர் ரணில் மத்திய வங்கி ஆளுநருடன் திடீர் சந்திப்பு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டவுடன் நாணயச் சபையுடன் கலந்துரையாடி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை விடுத்திருக்கிறார்.
பிணைமுறி மோசடி குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் 1,400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தி தொலைக்காட்சியூடாக உரையாற்றியிருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டபோது, அதனை வரவேற்று நல்லாட்சியின் சட்டத்தை மதிக்கும் போக்கு ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் நிரூபணமாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டதும் அது குறித்து நாணயச் சபையுடன் கலந்துரையாடி அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேபோன்று ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உள்ளக கணக்கறிக்கைகளை ஆய்வுசெய்யும் பொருட்டு பொருத்தமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றை தேர்ந்தெடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
2008 முதல் 2015 வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதால் மத்திய வங்கியின் அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு சுட்டிக்காட்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.
அது குறித்து உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர், மற்றும் சட்டம் ஒழுங்கு, அமைச்சின் செயலாளர் ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன, தேசிய கொள்கை, பொருளாதார விவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி , பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஆர். எச். எஸ். அமரதுங்க தேசிய கொள்கை, பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன் சந்திர, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad