ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் 5 வருடங்கள் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

16 January, 2018

ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் 5 வருடங்கள்

Image result for judgement
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணும் வகையில் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
இதன் படி அவரின் பதவிக் காலம் 6 வருடங்களன்றி 5 வருடங்களில் நிறைவடைவதாக உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப் பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அப்பொழுதிருந்த அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்களாகவே இருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அது 5 வருடங்களாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பதவிக் காலம் 2020 இலா அல்லது 2021 இலா என கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரியிருந்தார். இது பற்றி ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் ஐவரடங்கிய நீதியரசர் குழுவொன்றை நியமித்தார். இந்த நீதியரசர் குழுவில் பிரியசாத் டெப்,உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹார, சிசிர த ஆப்ரு மற்றும் கே.டீ.சித்ரசேன ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்த நீதியரசர் குழு கடந்த வாரம் கூடி ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஆராய்ந்தது. இதற்கு சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அபிப்பிரயாம் முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.இது தொடர்பான வழக்கில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட இறைமையைப் பயன்படுத்தி 19ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட முன்னரே மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துவிட்டதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மாற்றம் செய்வதானது மக்களின் இறைமையை ஒடுக்குவதாக அமையும். கடந்தகால விளைவுகள் குறித்து 19ஆவது திருத்தச்சட்டமூலத்தில் எந்தவொரு சரத்தும் இல்லை. அரசியலமைப்பானது கடந்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாற்றும் வகையில் திருத்த முடியாது" என சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏழு இடையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன், இவை தொடர்பில் வாய்மூல சமர்ப்பிப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
"அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்பதுடன், அரசியலமைப்பின் 32(1) சரத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டேன். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமையை அறிவித்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் ஆறு வருடங்களுக்கு நான் இந்தப் பதவியில் தொடர்வதற்கு ஏதாவது தடைகள் உள்ளனவா" என ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரியது தொடர்பில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையிலே உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad