துருக்கி விமானநிலையத்தில் பயணிகள் ஜெட் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருக்கும் பள்ளத்தில் கடலை நோக்கி சறுக்கியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காரவில் இருந்து 168 பயணிகளுடன் வந்த இந்த விமானம் டரப்சோன் நகரில் தரையிறங்கியபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக மாகாண ஆளுநர் யுசெல் யவுஸ் குறிப்பிட்டுள்ளார். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்தபோதும் விமானத்திற்குள் இருந்தவர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
கடல் விளிம்பில் சில மீற்றர்களுக்கு மேல் சேற்று பள்ளம் ஒன்றில் விமானம் சரிந்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
“நாம் ஒரு பக்கமாக சாய்ந்தோம். விமானத்தின் முன்பக்கம் கீழ் நோக்கி சாய்ந்ததோடு பின்புறம் மேலே உயர்ந்தது. உள்ளே பீதி ஏற்பட்டதோடு எல்லோரும் சத்தம்போட்டு, கூச்சலிட்டார்கள்” என்று பயணி ஒருவரான பத்மா கொர்து விபரித்துள்ளார்.
இதனை அடுத்து விமான நிலையம் பல மணிநேரம் மூடப்பட்டதோடு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment